Ananthoo's updates

When all trees have been cut down, when all animals have been hunted, when all waters are polluted, when all air is unsafe to breathe, only then will you discover you cannot eat money. - Cree Prophecy

Friday, March 13, 2020

காஸ்மோரா...

ஒடிஷாவில் ஆதி வாசிகளுடன் சந்திப்பு- மற்றொருமுறை வாய்ப்பு சமீபத்தில் அமைந்தது..எனக்கு மிகவும் பிடித்த‌ இந்த 'கோந்த்' என்னும் ஆதிவாசிகள் ஒரு பெரும் அதிசய வர்க்கம்..அவர்களிடம் கற்க ஏராளம் உண்டு..எல்லா ஆதி வாசிகளிடமும் உண்டு, இவர்களிடம் ஏராளம்..
சமத்துவம் - இவர்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தது..காடுகளை நேசிப்பதில், அதனுடன் இசைந்து வாழ்வதில், இயற்கையுடன் கை கோர்ப்பதில், காடுகளில் உணவு (இரை)தேடுதலில், பயிரிடா உணவினை பாவிப்பதில், இவர்களை மிஞ்ச யாருமில்லை..அதிலும் நீடித்து நிலைக்கும் வழிமுறைகள் எப்போதுமே முக்கியத்துவம் பெறும்..உதாரணத்திற்கு- அவர்களது விறகு காட்டிலிருந்து தான் வர வேண்டும், ஆனால் அதற்காக மரம் வெட்டப்படவே மாட்டாது..உலர்ந்த கிளைகளிலிருந்தோ வீழ்ந்த சருகுகளிருந்தோ தான்..எளிதாக இயற்கையை ஒட்டிய வாழ்க்கை முறைகள்..??

இப்படி ஒரு முறை அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, சமூகமாக, கூட்டாக வாழ்வது இவர்களுக்கு எவ்வளவு எளிது என புரிந்தது..'இணைந்த உலகம்' என்பது அவர்களுக்கு இயற்கை வரம்..
அவர்களது குடியிருப்புகள் ஒரு (ஒரே) மாதிரியாக இருக்கும்.. எல்லா வீடுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தே ஒரு தொடராக இருக்கும்..அப்படி இரு பக்கம் அமைக்கப்படும்..தனி (individual) வீடுகள் இருக்காது..(அதுவே இவர்களுக்கு வேறு விதமாக பிரச்சினை ஆனது. அரசின் ஒரு திட்டத்தின் கீழ், சிமென்ட் வீடுகள் கட்டிகொள்ள மானியம் வழங்கப்பட்ட போது, அதில் தனி வீடுகளாக இருக்க வேண்டும் என்பது ஒரு விதி!  இவர்களுக்கோ அப்படி இருக்காதல்லவா? அதனால் பண பட்டுவாடா நடைபெறாமல், பின்னர் சரி செய்யப்பட்டது!) பெரும்பன்மையினர் இன்னமும் அழகாக சாணியால் மொழுகப்பெற்ற மண் வீடுகளிலேயே வசிக்கின்றனர்.
ஓரிரு பெண்கள் மட்டும் காட்டிற்கு இரை தேடி (கீரைகள், பழங்கள், கிழங்குகள், போன்றவை)  சென்று திரும்புகையில், தத்தம் வீடுகளுக்கு எடுத்து செல்ல மாட்டார்கள். ஊர் நடுவில் பொதுவில் வைக்கப்படும்.. பின் அவரவர் தேவைக்கு எடுத்து செல்வர். இப்படி போகும் பெண்களின் குழந்தைகளுக்கு கூட அவர்கள் தனியாக வீட்டிற்கு எடுத்து செல்ல மாட்டார்கள்.. அந்த குழந்தைகளும் மற்றவர்கள் போல் 'பொது'விலிருந்து தான் எடுக்க வேண்டும்..
என்னே ஒரு அருமையான சமூக வாழ்க்கை முறை..இப்படி பல கதைகள் உண்டு..
அவர்கள் மிகவும் பரிணாம வளர்சி அடைந்த மக்கள்..அவர்களுக்கு சட்டங்கள் கிடையாது..("சட்டம் என்று இருந்தால் அது மீறப்படும்..ஆகையால் அவ்வப்போது, நிலைமைக்கேற்ப பொது நியதி கையாளப்படும் அல்லது பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படும்- கூட்டாக‌.." )
பெண்கள் பூப்பெய்த உடன், தனி இடத்திற்கு வேறு ஒரு இடத்தில், ஒரு முதிர்ந்த பெண்மணியின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறார்கள். பின் அப்பெண்கள், தங்கள் ஜோடியை தேர்ந்தெடுத்து, டேட்டிங் போல் சில காலம் கழித்து, தொடருவார்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கிறார்கள்! பெண் உரிமையும், சமத்துவமும்மிக எளிதாக, வார்த்தைகளோ ஆர்பாட்டமோ இல்லாமல் எளிதாக வாழ்கை முறையாக உள்ளது..
அவர்களது உணவு முறை மிக சிறப்பு வாய்ந்தது..70% காட்டிலிருந்தே வருகிறது. இவர்களும் எல்லா ஆதிவாசிகளைப்போல் நாடோடிகள்(அல்லது அப்படி இருந்தவர்கள்) எளிதாக பல கி மீ க்கள் நடப்பர்.. அதுவே அவர்கள் உடற்கட்டுக்கும் நலனிற்கும் ஒரு காரணி.. மேலும் சிறுதானியங்கள் அவர்களது முக்கிய பயிராகவும் உணவாகவும் இருந்தது..அதை தவிர மேலே கூறியது போல் பல பயிரிடப்படாத உணவும் (நாம் களை என்று கூறும் பலவும் அவர்களுக்கு சத்தான உணவு), அவர்கள் காடிலிருந்து சேமிக்கும் இலைகளும் பழங்களும், காளாண்களும்- இயற்கை தந்த சத்தான நல்லுணவு..கறி உண்ணும் பழக்கம் இருந்தும் பால் உண்ணவில்லை இவர்கள். அது கன்றுகளுக்கே என திட்டவட்டமாக கூறினர்!
நீடித்து நிலைக்கும் தன்மை, பேராசையற்ற அணுகுமுறை, பொது அறிவு, இயற்கை சீற்றதிடமிருந்து தப்பிக்கும் அடிப்படை அறிவு, சுற்றுசூழலுடன் இசைந்து வாழும் முறை எல்லாம் இணைந்து விளங்கிய சிறப்பான‌ வாழ்க்கை முறை..
அவர்களது பயிர் பருவம் 'விதை திரு விழா'வில் தான் தொடங்கும்..இங்கு விதைகளே கடவுள்.. (இவர்களுக்கு மலையே கடவுள்.. நம் போல் மலையில் கடவுள் அல்ல!) அதே போல் விதையே கடவுள்..வியாபாரம் கிடையாது, பரிமாற்றமே..எல்லோரும் தத்தமது விதைகளை கொண்டுவந்து பொதுவில் வைத்து வணங்கி, பின் அவரவர் கேட்கும் விதைகள் அவரவருக்கு கொடுக்கப்படும்..ஆம்! கொடுக்கப்படும்..அப்படி ஒரு அழகிய விதை விழா, அதன் பின் தான் பயிரிடும் வேலைகள்..விஷ ரசாயனக்கள் அறியா அற்புத மனிதர்களாகத்தான் இயற்கையோடு பிணைந்து இருந்தனர்..

ஆம்! இருந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்..மேற் கூறிய இரண்டும் தற்போது மிக மோசமாக க(கு)லைக்கப்படுகின்றன..ரேஷன், அரிசியை கொண்டு வந்து கொடுத்து, இவர்களை அதற்கு அடிமையும் ஆக்கி விட்டது..வெள்ளை அரிசியால் இவர்கள் முன் போல் சிறுதானியங்கள் விளைவிப்பது இல்லை, அப்படி விளைவித்தாலும் 'கீழே' கொண்டு வந்து அரிசிக்கு கைமாற்றி செல்கின்றனர்..அப்படியே தொற்று நோய்களுக்கு வழி வகுகின்றனர்..
அடுத்தது, பயிர் செய்யும் முறை- ரசாயங்கள் கொண்டு, மனமற்ற, தவறான பாதையில்..
இங்கு தான் அவர்களின் பேராசையற்ற வாழ்க்கை முறையை பார்க்க வேண்டும்..சில ஆண்டுகளுக்கு முன் அவர்களுடன் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிட்டியது..அவர்களிடம் பல கேள்விகளை கேட்கும் சந்தர்ப்பம் அது (ஒரு மொழிபெயர்ப்பளருடன் தான்- இவர்களது பாஷை 'குயி' என்பதாகும்) 'பிஜோனி' எனப்படும் பூசாரிப்பெண்மணியே பல முடிவுகள் எடுப்பவர், வழி காட்டியும் கூட..அவர்களது பயிர் முறை, பிரித்து வழங்கும் முறை பற்றி எல்லாம் கேட்டு அறிந்து வந்தோம்..அப்போது பண மதிப்பை குறைத்த சமயம்..அவர்களுக்கு ஏதும் பிரச்சினை இருந்ததா என்று கேட்ட போது சிரிப்பே பதிலாக வந்தது! ஊரில் ஒருவரிடம் கூட 500 ரூ அல்லது அதை விட பெரும் பணமே கிடையாது.. "எதற்கு வேண்டும்"??
"குடும்ப்" என்று அழைகப்படும் அவ்வூரிலுள்ள  மொத்த சமூகம் கூடி தான் எல்லா முடிவுகளும் எடுக்கின்றன..அவரவருக்கு பயிரிட நிலமும் அப்படி தான் பிரித்தளிக்கப்படுகிறது..தனி நபர் இருப்பு என்பதே கிடையாது, பின் எப்படி வரும் பேராசை..
அவர்களது பயிர் முறையும் கூட அற்புதம்.. எல்லோரும் இணைந்தே வேலை செய்வர்.. மகசூல் எல்லாம் பொதுவில் வர, அவரவர் தேவைக்கு எடுத்து கையாள்கின்றனர்.
இதனை புரிந்து கொள்ள முதலில் பல்வேறு கேள்விகளைக்கேட்டேன்..அந்த பூசாரிணிப்பெண்மணியிடம், நான் எது கேட்டாலும் கொடுப்பீர்களா என்றேன், 'ஆம்' என்றார்..அதற்கு முன்பே பயிர்கள், அவரவர் வீட்டில் உள்ள கையிறுப்பு பற்றி கேட்டிருந்தேன்..அகையால் எனக்கு அவரிடம் 25கி துவரை இருப்பது தெரியும்..
10 கி துவரை கொடுப்பீர்களா? ஆம், எடுத்துக்கொள் என்றார்.
25? அதுவும் எடுத்துக்கொள் என்றார்..
40 கி என்றேன் (எனக்கு அவரிடம் 25 தான் உள்ளது என்று தெரியுமல்லவா) இத‌ற்கும் ஆம் என்றார்..உடனே நான் சிரித்துக்கொண்டே உங்க‌ளிடம் அவ்வளவு கிடையாதே, எனக்கு தெரியுமே என்றேன்! அவர் ஆம், என்னிடம் கிடையாது, ஆனால் நீ கேட்கிறாய்..உனக்கு தேவை என்று தானே.. நான் என்னிடமிருக்கும் 25 மற்றும் அவரிடம் (அருகிலிருக்கும் வேறொருவரைகாண்பித்து) அல்லது இவளிடம் பெற்று தருவேன்..இதில் என்ன? என்றார் சர்வ சாதாரணமாக..
அவர்களது நில பிரித்தளிப்பும்..அவரவர் தமக்கும் வேண்டியதை (தம்மால் முடிந்த) கேட்பர்..கொடுக்கப்படும்..
அதிலும் நான், ஒருவர் 40 கேட்டால்? 50 கேட்டால்? என்றேன்.. அதே சிரிப்பும், கொடுப்பேன் என்ற சைகையும் அந்த பாட்டியிடமிருந்து.. எல்லா 100 ஏக்கரையும் கேட்டால் என்றேன்..அதற்கு பெரிதாக சிரித்து, கொடுத்து விடுவோம்!
அப்படி என்றால் எங்கள் எல்லோருக்கும் வேலை இல்லை.. அந்த ஒருவரே 100 ஏக்கருக்கும் பொறுப்பு..எப்படியும் மகசூலை எல்லோருட‌ன் பங்கு தானே போட்டுக்கொள்வோம்!
எப்படி பேராசை வரும்? என்னே ஒரு சமூகம்!!
வெளி கூலியாள் என்பதே கிடையாது அவர்களுக்கு..அனைவரும் இணைந்து எல்லா நிலத்திலும் வேலை செய்வர்..உன், என் என்று எதுவும் கிடையாது!மகசூல் மொத்தாமும் பொதுவில்..
ஆனால் இந்த வழிமுறைகளும் சிறப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிகிறது..அழிக்கப்படுகிற‌து..மீட்க முடியாத வண்ணம்..
'வளர்ச்சி' அடைந்த இந்த வெளி சமூகத்தால் அழிக்கப்படுகிறது..அவர்களின் வியாபாரிகள் இங்கு வந்து, (மரபணு மாற்றப்பட்ட‌ விதைகளையும், அதனுடன் களைக்கொல்லிகளையும், வேறு பல விஷங்களையும்) கடனில் கொடுத்து, மகசூலில் கழித்துக்கொள்கின்ற‌னர்..இதனை மேற்கொண்டவர்கள் பல பிரச்சினைக்கு ஆளாகின்ற‌னர்.,அவர்களுக்கு சொல்லப்பட்ட கனவுகள் நிகழ்வதில்லை..மண்ணும், காற்றும் அவர்களது நிதி நிலைமையும் கேடாகின்றன..
பேராசை அறியா இந்த மனிதர்களுக்கு அதனை ஊட்டி, அவர்களை பெரும் பிர்ச்சினைகளில் தள்ளி, அவர்களது நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் கெடுத்து..
கடந்த 2 ஆண்டுகளிலேயே பல பிர்ச்சினைகளை பார்க்கின்றனர்.. மண் மலடாவது கண் கூடு..ஊர் முதியோர்கள் இப்பொழுது தான் குரல் கொடுக்கின்றனர்..க்ளைஃபோசேட் என்னும் கொடிய விஷம் - உலகெங்கிலும் பெரிதாக எதிர்க்கப்பட்டும் தடை செய்ய பட்டும் வரும் இது, இந்த அழகிய கன்னி நிலங்களிலும் காட்டிலும் வரத்தான் வேண்டுமா? இந்த க்ளைஃபோசேட் வந்த சில ஆண்டுகளிலேயே பல உடல் உபாதைகளும் புதிதாக தோன்ற ஆரம்பித்துள்ளன.. ஆய்வுகள் நடத்தப்படவில்லை தான்..படிப்பினைகள் இல்லை..ஆனால் வாய் வார்த்தையாக, யதார்த்தமாக பலரும் இதனை கோடிட்டு காட்டுகிறார்கள்..
இவர்களது சிறந்த போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பயிர்களும், பயிர் முறைகளும், விதைகளும், மண்ணும், காடும், வாழ்வாதாரங்களும் அழிக்கும் இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியும், களைக்கொல்லியும் தேவையா? ஒடிஷாவில் பி டி பருத்தியே தடையில் உள்ள போது ஹெச் டி பி டி எனும் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள கலைக்கொல்லி தாங்கும் மரபணு பயிர் எப்படி சாத்தியம்? அதுவும் இவ்வளவு பெரும் அளவில்?

பேராசை எப்படி இந்த மாதிரி புனிதமான சமூகங்களையும் அசைக்க‌ முடியும்!
தம் விறகு தேவைக்கு கூட மரம் வெட்டாத சமூகம் இது! உணவினை தேடும் போது கூட மற்ற ஜீவராசிகளின் உணவினைப்பற்றியும் யோசித்து செயல்படும் பெரும் சமூகம் இது..அள்ளி சேர்ப்பது, தனி நபர் சொத்து என்னும் கேடுகளற்ற பெரும் கூட்டம் இது..

இவர்கள் இந்த கலைக்கொல்லியை தான் 'காஸ் மோரா' என்கிறார்கள்- அப்படி என்றால் புல்கள் கொல்லி..ஆம்! கொல்லி தான்..
எதை எல்லாம் கொல்கிறது என்பதை யார் இவர்களுக்கு விளக்குவது? அரசும், சமூக ஆர்வலர்களும், அரசு சாரா குழுக்களும், சிவில் சமூகமும் தான்..

காஸ்மோரா...இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..அவ்வப்போது தூக்கத்திலும்..