Ananthoo's updates

When all trees have been cut down, when all animals have been hunted, when all waters are polluted, when all air is unsafe to breathe, only then will you discover you cannot eat money. - Cree Prophecy

Sunday, December 01, 2013

விவசாய மானியத்திற்கு வேட்டு வைக்கும் அமெரிக்க ஆளுமை தேவையா?

sort of first time..
my article in todays Dinamalar..a largely circulated tamil daily newspaper..
on WTO and how it affects our agriculture and farmers..

http://www.dinamalar.com/news_detail.asp?id=862501

விவசாய மானியத்திற்கு வேட்டு வைக்கும் அமெரிக்க ஆளுமை தேவையா?

இந்தோனேஷியாவின் பாலி நகரில், நாளை முதல் நான்கு நாட்களுக்கு, உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் நடக்க உள்ளது.

அதில், இந்திய விவசாயிகளின் நலன்களை பாதிக்கும் விதமான ஒப்பந்தம் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா அதில் கையெழுத்திட்டால், வேளாண் மானியங்கள் குறித்து, முடிவெடுக்கும் அதிகாரத்தை இழப்பதோடு, ஏழைகளுக்கு மலிவு விலையில், உணவு பொருட்கள் அளிப்பதன் மீதான தனது கொள்கை அதிகாரத்தையும் இழக்கும்.சர்வதேச ஒப்பந்தங்களும், உறவுகளும், நம் நாட்டில் பொது இடங்களில் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை.ஆனால், தற்போது, நம்முடைய வெளியுறவு கொள்கை, நம் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்க உள்ளதால், சர்ச்சைக்குரிய அந்த ஒப்பந்தம் குறித்து தெரிந்து கொள்வதும், அதை எதிர்ப்பதும், ஒவ்வொருவரின் கடமையாகிறது.

ஒப்பந்தம் தான் என்ன?சர்ச்சைக்குரிய அந்த ஒப்பந்தத்தின் பெயர், "உலக வர்த்தக அமைப்பின் வேளாண் ஒப்பந்தம்'. அது சர்வதேச விளைபொருள் வர்த்தகத்தை, எளிமையாக்கவும், நியாயமாக்கவும், உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் என, உலக வர்த்தக அமைப்பும், மேற்கத்திய நாடுகளும் கூறுகின்றன.அதன்படி, எளிமையாக்குவது என்றால், அனைத்து நாடுகளும் விளைபொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும்.
நியாயமாக்குவது என்றால், அனைத்து நாடுகளும் சமதளத்தில் சர்வதேச உணவு சந்தையில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.அதற்காக, விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியங்கள், ஒரு நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில், 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை, அந்த ஒப்பந்தம் விதிக்கிறது.

ஏன்? மானியத்தை அதிகரித்து, எந்த ஒரு நாடும் தனது விளைபொருட்களை மலிவாக்கி, சர்வதேச சந்தையில், விற்கக் கூடாதாம்.அதற்காக, உற்பத்தியை ஊக்குவிக்கும் மானியங்களையும் அந்த ஒப்பந்தம் தடை செய்கிறது.
இது, "வீட்டிற்கு கதவு இருக்க கூடாது; அதன் அபாயத்தில் இருந்து உங்களை காப்பதற்காக, திருடர்களை சீர்திருத்தி வருகிறோம்' என, கூறுவது போல உள்ளது."எல்லா நாடுகளுக்கும் ஒரே விதிகள் தானே விதிக்கப்படுகின்றன? இதையேன் நாம் ஏற்கக் கூடாது?' என்று சிலருக்கு கேள்வி எழலாம்.

சமநிலையில் உள்ளோமா?
ஒவ்வொரு நாட்டிலும், வேளாண்மை, ஒவ்வொரு விதமாக நடக்கிறது. நம் நாட்டிலேயே ஒவ்வொரு மாநிலத்திலும், விவசாய முறைகளும் விவசாயிகளின் தேவைகளும், வேறுபடுகின்றன.
இந்திய வேளாண் நிலையை அமெரிக்க வேளாண்மையோடு ஒப்பிட்டால் சற்றுத் தெளிவு பிறக்கும்.
* இந்தியாவில், வயல்களின் சராசரி பரப்பு, தலா ஒரு ஹெக்டேர் தான். இதுவே, அமெரிக்காவில், 400 ஹெக்டேர்.
* அமெரிக்காவில், இரண்டு முதல் நான்கு சதவீதத்தினர் மட்டுமே விவசாயிகள். நம் நாட்டில், 60 சதவீதத்திற்கும் மேலானோர் விவசாயிகள்.
இந்த இரண்டு புள்ளி விவரங்களே, அவர்களது வேளாண் உற்பத்தி முறையில் இருந்து, நம்முடையது எவ்வளவு வேறுபட்டிருக்கும் என, கணிப்பதற்கு உதவும்.
ஒருபக்கம், தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சட்டைகள், மறுபக்கம் காதி சட்டைகள்; சந்தையில் எது வென்றது என, வரலாறே தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.அமெரிக்க வேளாண்மையோடு போட்டியிடுவது, இந்திய விளைபொருட்களை காதி சட்டைகள் போல் ஆக்கி விடும். மேலும், "அரசு, ஏழைகளுக்கு மலிவு விலையில் வழங்கும், உணவுப் பொருட்களால், சர்வதேச சந்தையில், விலை பாதிப்பு ஏற்படுகிறது. அதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்' என, அந்த ஒப்பந்தம் கூறுகிறது. அதாவது, விவசாயிகளுக்கு மானியமும் வழங்க முடியாது; மக்களுக்கு மலிவு விலையில் உணவும் வழங்க முடியாது என்ற நிலைக்கு நம் நாடு தள்ளப்படும்.

ஒரே வழி:இறக்குமதி விளைபொருட்களுக்காக, மேற்கத்திய நாடுகளுக்காக, சூனியமாக்கப்பட உள்ள நமது உணவு உற்பத்தியை, பாதுகாக்க ஒரே ஒரு வழி தான் உள்ளது.நமது, அரசியல் அமைப்பச் சட்டத்தின்படி, வேளாண்மை, மாநிலங்களின் அதிகார கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.இத்தனை காலம், மத்திய அரசின், தவறான கொள்கைகளால் தான் வேளாண்மை அழிந்தது. "நடந்த வரை போதும். மத்திய அரசு உலக வர்த்தக அமைப்புடன் வேளாண் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது' என, மாநில அரசுகள் போர்க்கொடி பிடிக்க வேண்டும்.இதற்கு, குடிமக்களான நாம் தான், நமது எதிர்காலம் கருதி, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அனந்து
(கட்டுரையாளர்: பாதுகாப்பான உணவு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிறுவனர்)